A Monthly Newsmagazine from Institute of Contemporary Islamic Thought (ICIT)
To Gain access to thousands of articles, khutbas, conferences, books (including tafsirs) & to participate in life enhancing events

None

வெளியே மகா ஆத்மா, உள்ளே தீய ஆத்மா Saint abroad, a devil at home (Tamil)

Abu Dharr

ஒரு அறிஞர், பேச்சாளர், போராளி என்றளவில் ஷெய்க் யூசுஃப் அல்-கர்ளாவி நீண்டதொரு சாதனைப் பட்டியலைக் கொண்டவர். எனினும், அவரின் சமீபத்திய நிலைப்பாடு உம்மத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் முஸ்லிம்கள் மத்தியில் உட்பூசலையும் போரையும் தூண்ட முயற்சிப்பது ஏன்?​

என்றேனும் ஒருநாள் இப்படியொரு கட்டுரையை எழுதவேண்டியிருக்கும் என்று நான் ஒருநாளும் எண்ணியதில்லை. இதையடுத்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் கனமான இதயத்துடன், விருப்பமில்லாத பேனாவைக் கொண்டே எழுதப்படுகிறது.

ஷெய்க் யூசுஃப் அல்-கர்ளாவி விளைவுவளம் மிக்க எழுத்தாளர்; சரளமான பேச்சாளர். அவரின் பெரும்பாலான எழுத்தாக்கங்களும் உரைகளும் “ஃபிக்ஹி” விடயங்கள் என்று அழைக்கத் தக்கவற்றை மையமாகக் கொண்டவை. அவர் திருக்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் கவிதைகளையும் மிக அனாயசமாக மேற்கோள் காட்டும் மனனத் திறன் கொண்டவர். உண்மையிலேயே அபாரமானவர்! (அவரைப் பல்லாண்டுகள் தொடர்ந்து அவதானித்து வரும் பல அறிவுஜீவிகளும் -குறிப்பாக அல்-ஜஸீராவில் ஒளிபரப்பாகும் வாராந்திரத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் போது கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களில்- அதிமுக்கியமான பல தருணங்களைக் கவனித்திருக்கக் கூடும்). பல்லாண்டு கால நாடுகடத்தலையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தமை அவருக்கு ஒரு மனமறியா நற்சான்றாக அமைந்துள்ளது எனலாம். 1960 மற்றும் 1970 கள் தொடர்பான சில குறிப்பிட்ட தகவல்களைப் பலரறிய வெளிப்படுத்த முடியாததொரு நிலையில் நானிருக்கிறேன். எனினும், இன்று அவர் தன்னையும் அறியாமல் ஒரு அபாயகரமான பாத்திரத்தை ஆற்றிவருகிறார். சமீபத்திய ஆண்டுகள் அவரை ஓர் அறிஞர் என்ற நிலையிலிருந்து 'ஏகாதிபத்தியம் மற்றும் ஸியோனிசத்தின் கருவி' என்பதாக மாற்றி வரைவிலக்கணம் செய்திருக்கின்றன. மகா கிருபையாளன் அல்லாஹ் தன்னுடைய நியாயத் தராசு முள்ளை அவரின் பிந்தைய வருடங்களுக்கு எதிர்த்திசையில் முந்தைய வருடங்களின் பக்கம் சாயச் செய்வானாக!

ஷெய்க் யூசுஃப் அல்-கர்ளாவி தனது சில குத்பாக்களிலும் நேர்காணல்களிலும் இஸ்லாத்திற்குள் உட்பூசலையும் போரையும் தூண்டும் விதமாகப் பேசத் துவங்கியிருப்பதன் மூலமாக முஸ்லிம்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். கடந்த சில மாதங்களில் அவர் அதிகாரபூர்வமாக கூறியன சில:

1. "ஸியோனிஸ்டுகளைக் காட்டிலும் அலவிகள் (இது ஷியாக்களைக் குறிக்கிறது) அபாயகரமானவர்கள்."

2. தாம் மட்டும் இளைஞராக இருந்திருந்தால் சிரியாவின் அல்-குசைர் நகரில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக (இது ஹிஸ்புல்லாஹ்வைக் குறிக்கிறது) ஆயுதமேந்திப் போரிட்டிருப்பேன் என்றார்.

3. ஹிஸ்புல்லாஹ்வை 'ஹிஸ்புஷ் ஷைத்தான்' (ஷைத்தானின் கட்சியினர்) என்றும், 'ஹிஸ்புத் தாகூத்' (வல்லாதிக்கச் சக்திகளின் கட்சியினர்) என்றும் அழைக்கிறார்.

4. முந்தைய வருடங்களில் ஹிஸ்புல்லாஹ்வை ஆதரித்த அறியாமைத் தனத்துக்காக இப்போது வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். 2006-ம் ஆண்டில் ஹிஸ்புல்லாஹ்வை நசுக்கியழிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ முயற்சி என்றளவில் லெபனான் மீது ஸியோனிஸ்டுகள் குண்டுவீச்சுத் தாக்குல் நடத்தினர். தாக்குதலின் போதும் அதற்குப் பிறகும் அறிஞர்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பாக ஒரு கொந்தளிப்பு நிலை தோன்றியது. (இத்தாக்குதலில்) எதிர்ப்புப் போராட்ட இயக்கம் நசுக்கப்படவில்லை; முரணாக, இந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் இறுதியில் அவர்களுக்கே பாதகமாகத் திரும்பிவிட்டது. இத்தகையதொரு சூழமைவில் சவூதி “அறிஞர்கள்”, முஸ்லிம்கள் யாரும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தனர். அச்சமயம் அல்-கர்ளாவி அரேபியாவின் அரசவை அறிஞர்களோடு உடன்படாது ஹிஸ்புல்லாஹ்வை “தற்காத்து” வாதித்தார். ஆனால், தாம் அப்போது தவறிழைத்து விட்டதாக இப்போது கூறுகிறார். சவூதி அரேபிய அறிஞர்கள்தான் ஹிஸ்புல்லாஹ்வின் உண்மை இயல்பினைச் சரியான முறையில் விளங்கி இனம்கண்டுள்ளார்கள் என்றும் கூறுகிறார். தனது முந்தைய அறியாமைக்காக வருத்தம் தெரிவிப்பது மட்டுமின்றி, சவூதி அறிஞர்கள் கொண்டிருந்த முன்னறிவுக்காக அவர்களைப் புகழ்ந்து பாராட்டவும் செய்திருக்கிறார்!

5. அல்-கர்ளாவி ஜூன் மாத மத்தியில் முஸ்லிம் அறிஞர்களின் பிரதிநிதிக் குழுவொன்றுக்கு தலைமையேற்று எகிப்துக்கு விஜயம் செய்து குடியரசுத் தலைவர் முஹம்மது முர்சியைச் சந்தித்தார். நோக்கம் என்ன? சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்துடிப்பாகப் பங்காற்றுவோரின் பட்டியலில் எகிப்தையும் சேர்த்துக் கொள்வது. எகிப்திய அரசியல் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் இருந்த சமயத்தில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா மிகப் பெரியதொரு அணையைக் கட்டத் துவங்கியிருந்தது. பல பத்து இலட்சக்கணக்கான எகிப்தியர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த ஒரு சூழல். இந்த நடவடிக்கை எகிப்துக்கு ஒரு தேசிய அபாயம் என்று மதிப்பிடப்படுகிறது. தொழுகை நேரம் வந்தபோது யார் தொழுகைக்குத் தலைமை தாங்குவது என்று ஒரு அமளி ஏற்பட்டதாகவும், இறுதியில் சகோதரர் முர்சி இமாமாக இருப்பதென்று தீர்மானிக்கப்பட்டதாகவும் செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலே கூறப்பட்டவற்றுக்கு வலுவூட்டும் வகையிலேயே அல்-கர்ளாவியின் இன்னபிற (கடந்தகால, நிகழ்கால, பிற்கால) கூற்றுகளும் செயல்களும் அமைந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

துரிதமான இந்த மீள்பார்வையைத் தொடர்ந்து, இவ்வாறு கூறித் துவங்குவோம்: அல்-கர்ளாவி உலகில் நிலவும் (அல்லது முஸ்லிம் கிழக்குலகில், அல்லது அவர் தனக்கென உவந்தேற்றிருக்கும் நாடான கத்தாரில் நிலவும்) அதிகார அரசியலின் இயங்கியல்களை விளக்கியுரைக்கும் (நாமறிந்த மட்டும்) ஒரேயொரு நூலைக் கூட இதுவரை இயற்றியதில்லை, ஒரு உரையேனும் நிகழ்த்தியதில்லை. முஸ்லிம் அறிஞர்கள் பெரும்பாலானோரிடத்தில் பிரச்சினை இதுதான்- அவர்கள் தமக்கென (தமது சொல்லையும் செயலையும்) சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு சித்தாந்த, அரசியல் சட்டகத்தை விருத்தி செய்துகொள்வதில்லை.

சிரியாவின் உள்நாட்டுப் போரில் “இறைவனின் நிமித்தம்” அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டுமென்று அல்-கர்ளாவி தனது குத்பா ஒன்றில் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அல்-கர்ளாவி எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்? வேறு ஏதேனுமொரு கிரகத்திலா? அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதுவரை முஸ்லிம் உலகுக்குச் செய்திருப்பதென்ன என்று அவரால் பார்க்க முடியவில்லையா? முஸ்லிம் மண்டையோடுகளின் மேட்டினைத் துளைத்து ஊடுருவி மலையெனக் குவிந்திருக்கும் முஸ்லிம் எலும்புக் கூடுகளின் மீது தானே இன்று அமெரிக்க வெளியுறவுக் கொள்கையே நின்று கொண்டிருக்கிறது. அல்-கர்ளாவி தோஹாவிலுள்ள மஸ்ஜிதின் மிம்பர் படிகளில் நிற்கும்பொழுது, அந்தப் பிராந்தியத்தில் உள்ளதிலேயே மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தின் நிழலின் கீழ்தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரிவதில்லையா?

முஸ்லிம்கள் தமது சக முஸ்லிம்களோடு போரிட வேண்டி சிரியாவுக்குக் கிளம்பிச் செல்ல வேண்டுமென்று அறைகூவி ஃபத்வாக்களை உற்பத்திசெய்து தள்ளிக் கொண்டிருக்கிறார் அல்-கர்ளாவி. பிராந்தியம் முழுக்க காட்டுத் தீயெனப் பரவி, வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு நீடிக்கவல்ல ஒரு இஸ்லாமிய உட்பூசல் மற்றும் போருக்கான செய்முறைக் குறிப்புகள்தான் இந்த ஃபத்வாக்கள். முஸ்லிம்கள் ஃபலஸ்தீனுக்குக் கிளம்பிச் சென்று ஸியோனிச எதிரிக்கு எதிராகப் போரிட வேண்டுமென்று அழைப்புவிடுக்கும் ஃபத்வாக்கள் எதையும் அவர் வெளியிடாதது ஏன்? (அவ்வாறு செய்திருந்தால்) பல்வேறு சமய, அரசியல் நிரல்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள்திரளை ஒருமைப்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமையும் வல்லமை கொண்டதாக அது இருந்திருக்கும் அல்லவா. ஃபலஸ்தீன உயிர்கள் மலிவானவை என்றும் பெறுமதி அற்றவை என்றும் (அவர் கருதியிருக்கக் கூடும் என்று) அனுமானிக்கிறேன்.

இப்போது அல்-கர்ளாவி சவூதி வட்டாரங்களில் நல்லவிதமாகப் பார்க்கப்படுகிறார். எந்தளவுக்கென்றால், அவர்களின் பெருமதிப்பிற்குரிய இப்னு தைமிய்யாவுடன் கூட அவர் ஒப்பிடப்படுகிறார். ஏன் ஒப்பிடக் கூடாது? அவர்தான் இப்போது உட்பிரிவுவாத வெறியர்களின் செத்துப்போயிருந்த மொழியாடலையும், கொலைவெறியைத் தூண்டும் சொற்கோவையையும் மீள உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறாரே! இந்நாட்களில் அவரின் குத்பாக்கள் உணர்ச்சியைக் கிளறி விடுபவையாகவும், முஸ்லிம்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டுபவையாகவுமே இருக்கின்றன.

காஸாவின் மீது இஸ்ரேலியர்கள் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியபோது (ஆபரேஷன் கேஸ்ட் லெட்) அல்-கர்ளாவி மொழிந்த வார்த்தைகள் என்று எவருக்கேனும் ஏதாவது நினைவிருக்கிறதா? தாம் மட்டும் இளைஞராக இருந்திருந்தால் காஸாவுக்குக் கிளம்பிச் சென்று ஸியோனிஸ்டுகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியிருப்பேன் என்று அவர் அப்போது ஏன் சொல்லவில்லை? செறிவுகுறைந்த யுரேனியக் குண்டுகள், அபூ குரைப், அல்-ஃபல்லூஜா என்று அமெரிக்க இராணுவம் ஈராக்கையே நாசக்காடாக்கிக் கொண்டிருந்த வேளை, அல்-கர்ளாவியிடம் இருந்து ஒரு ஃபத்வாவேனும் வெளிவந்ததாக யாருக்கேனும் நினைவிருக்கிறதா? இஸ்லாமியப் பூமிகளையும் புனிதத் தலங்களையும் ஏகாதிபத்திய அமெரிக்கர்கள் ஆக்கிரமித்த வேளை அரேபியாவிலுள்ள தமது எஜமானர்கள் அந்த ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்துச் செயற்பட்டது அல்-கர்ளாவிக்கும் மற்ற பெட்ரோ-அறிஞர்களுக்கும் உறைக்கவே இல்லையா?

அல்-கர்ளாவியும் மற்ற "இருப்புநிலை அறிஞர்களும்" ஹிஸ்புல்லாஹ்வைக் குறித்து மிகுந்த பதற்றத்திற்கு ஆளாவது ஏன்? ஹிஸ்புல்லாஹ்வுக்கும் சையது ஹசன் நஸ்ருல்லாஹ்வுக்கும் எதிராக இத்துணை வெறுப்புநிறைந்த அவதூறு மொழியை உமிழ்வது ஏன்? இங்குதான் இவர்களின் உண்மை இயல்பு பளிச்சிடுகிறது: ஹிஸ்புல்லாஹ்வும் இஸ்லாமிய ஈரானும் ஃபலஸ்தீனை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைத் திட்டத்தின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளிம்பில் இருப்பதைக் காணும் இந்த பணத்திற்கு-விலைபோன-அறிஞர்கள் (scholars-for-dollars), “அஹ்லுஸ் சுன்னாக்களின்” ஃபலஸ்தீனை “அஹ்லுஷ் ஷியாக்கள்” விடுவிப்பதால் தோன்றக்கூடிய பின்விளைவுகளை தம்மால் எதிர்கொள்ள முடியாது என்றெண்ணி மிகுந்த பதற்றத்திற்கு ஆளாகின்றனர். “(அப்படியொன்று நடக்குமாயின்) அது அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களைப் பற்றி என்ன சொல்வதாக அமையும்? என்று அவர்களின் திருகி முறுகிய மனங்கள் யோசிக்கின்றன. யதார்த்தத்தில், அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களைப் பற்றி அது ஒன்றையும் சொல்லாது; மாறாக, அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சிமுறைகளைப் பற்றித்தான் ஏராளமாய்ச் சொல்லும். ஆனால், இந்த அரசவை அறிஞர்களோ அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களையும் அவர்களை ஆளும் ஆட்சிமுறைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. உணமையான பிரச்சினை இங்குதான் இருக்கிறது.

இந்தப் போலி-அறிஞர்கள் ஃபலஸ்தீனை விடுவிக்கும் கடமையைக் கைகழுவி விட விரும்புகிறார்கள் எனில் போகட்டும், அவர்களின் உழைப்பை மனமுவந்து வரவேற்கும் மற்ற பல எல்லைகள் இருக்கின்றனவே. ஒட்டுமொத்த ஜோர்தானும், சினாய் தீபகற்பமும் இருக்கின்றதே… இவ்வாறிருக்க, இவர்கள் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், இஸ்லாமிய ஈரானிலிருந்து இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்ட இயக்கம் வரை நீளும் விடுதலைப் போராட்டக் கூட்டணிக்கு எதிராகவும் கும்பல் சேர்த்துக் கொண்டு அவற்றின் முயற்சிகளை வீணாக்க முயலுவது ஏன்?

(இவர்கள் மட்டும் இதற்கு மாற்றமாகச் செயல்பட்டால்) எத்தகையதொரு விடுதலைக் களம் உருவாகும் என்று எண்ணிப் பாருங்கள்: (ஹிஸ்புல்லாஹ், ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட) வடக்கத்திய இஸ்லாமியப் படையணிகளையும் (ஹமாஸ், எகிப்து, அரேபியா, வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட) தெற்கத்திய இஸ்லாமியப் படையணிகளையும் உள்ளடக்கிய கூட்டுப் படைகள் ஒன்று உருவாக முடியாதா? சுதந்திர மனங்களும் சுதந்திர ஆன்மாக்களும் அது போன்றதொரு விஸ்வரூப படையணியைத்தான் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களைப் பிரித்தாளுவதற்காக உட்பிரிவுவாதம், தேசியவாதம் மற்றும் இன்னபிற வாதங்கள் தூண்டப்படுவதால் விளையும் உட்கலகத்தையும் உட்பூசல்களையும் அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது. ஆனால், அதைத்தான் இந்த அல்-கர்ளாவியும் அவரையொத்த அறிஞர்களும் செய்து கொண்டிருக்கின்றனர். கத்தாரின் பெருங்கொடைகளாலும் கர்ளாவியின் ஃபத்வாக்களாலும் “விடுவிக்கப்பட்ட” (துனீஷியா, லிபியா மற்றும் எகிப்து ஆகிய) மூன்று நாடுகளும் அணிசேர்ந்து, ஃபலஸ்தீனை விடுவிப்பதற்கான ஒரு இஸ்லாமிய மூலோபாயத் திட்டத்தை ஏன் உருவாக்கக் கூடாது? ஃபலஸ்தீனை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு ‘ஒருங்கிணைக்கப்பட்ட வட ஆப்பிரிக்கக் கொள்கையை’ அவற்றால் வகுக்க முடியாதுள்ளமை, நமது கண்களுக்குப் புலப்படாத இன்னும் சில சக்திகள் ‘அரபு வசந்தத்துடன்’ சம்பந்தப்பட்டுள்ளன என்பதையே நமக்குத் தெரிவிக்கின்றன. துனீஷியா, லிபியா எகிப்து ஆகியவை உங்களின் செல்லத்திற்குரிய பணித்திட்டங்கள் தானே?! ஃபலஸ்தீனை விடுவிப்பதில் உங்களால் இஸ்லாமிய ஈரானுடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்றால்; அல்லது, அதனைப் பூர்த்தியாக்கும் விதத்தில் அமைய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் அதன் மூலோபாயத் திட்டத்தில் குறுக்கிடாமலாவது இருக்கலாம் தானே! ஆனால் நீங்களோ அதையும் செய்வதில்லை. மாற்றமாக, அதனைப் பாழ்படுத்தும் பாத்திரத்தை செயற்படுத்துவதிலும்; உட்பிரிவுவாத விவாதங்களையும், (நேராகச் சிந்திக்கும் எந்தவொரு மனிதரும் அலட்சியப்படுத்த முடியாத) பச்சையான வெறுப்புணர்வையும் பரப்புவதன் மூலம் இஸ்லாமிய இரத்தத்தைச் சிந்துவதிலும் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

ஹிஸ்புல்லாஹ் தானொரு ஹிஸ்புல்லாஹ் தான் (அல்லாஹ்வின் கட்சி) என்பதை நிரூபித்திருக்கிறது. அரபு இராணுவப் படையணிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்தும் கூட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ஒரு அங்குலத்தையேனும் விடுவிக்க முடியாத நிலையில், ஹிஸ்புல்லாஹ்வோ தெற்கு லெபனான் முழுவதையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து வெற்றிகரமாக விடுவித்திருக்கிறது. இந்த ஒரு காரணம் மட்டுமே நாம் இவ்வாறு கூறுவதற்குப் போதுமானது. அதே போன்று, ஹிஸ்புல்லாஹ் சமீபத்தில் சிரியாவில் 20-30 நாடுகளைச் சேர்ந்த கூலிப்படைகளை தோற்கடித்த போதும் 'யார் அல்லாஹ்வின் பக்கம் இருக்கிறார்கள்' என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. (சிரியாவை வீழ்த்தி) இஸ்லாமிய ஈரானைப் பலவீனப்படுத்துவதன் மூலம் ஃபலஸ்தீனை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது கொள்கையைக் கைவிடும்படி இஸ்லாமிய ஈரானை நிர்பந்திக்கும் நோக்கம் கொண்ட வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் டெல்அவீவின் கரங்களில் நாம் பகடையாகி இருக்கிறோம் என்பதை இந்தக் கூலிப்படைகள் உணர்வதில்லை.

நாம் கேட்க வேண்டிய மற்றொரு நியாயமான கேள்வி என்னவென்றால், அல்-கர்ளாவி ரஷ்யாவைத் தாக்கும் அதே பாணியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைத் தாக்குவதை நம்மால் செவியுற முடியவில்லையே, ஏன்? சிரியாவைத் தாக்கும் அதே பாணியில் சவூதி அரேபியாவைத் தாக்குவதில்லையே, ஏன்? ஹிஸ்புல்லாஹ்வைத் தாக்கும் அதே பாணியில் தக்ஃபீரிகளைத் தாக்குவதில்லையே, ஏன்? சிரியாவும் மற்றொரு ஈராக்காக அல்லது லிபியாவாக மாற வேண்டுமென்று அல்-கர்ளாவியும் அவரின் அடிபொடி அறிஞர் குழுவும் விரும்புகின்றனரா? இங்கு நாம் சிரியா அரசாங்கத்தை ஆதரித்து வாதிக்க முயலவில்லை; இஸ்லாத்திற்கு எதிரான அரசமைப்புகளுக்கும் அவற்றின் ஏகாதிபத்திய சிருஷ்டிகர்த்தாக்களுக்கும் எதிராகவே வாதிக்க முயலுகிறோம்.

இவை அல்-கர்ளாவியின் சொந்த அபிப்பிராயங்களாக மட்டுமிருந்து, அவர் தனதிந்த அப்பிப்பிராயங்களை பொதுஅரங்கில் முன்வைக்காது இருந்திருப்பின் முஸ்லிம்கள் அதனைச் சகித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அவரோ போரிடும் வார்த்தைகளோடு கோதாவுக்குள் இறங்கியது மட்டுமின்றி, பல பத்து இலட்சக்கணக்கான பார்வையாளர்களையும் கேட்போர் கூட்டத்தையும் தன்னோடு இழுத்துக் கொண்டுவர முயற்சிக்கும் போதுதான் பிரச்சினையை சந்திக்கிறோம். அதாவது, அனுபவமற்ற அறிஞர்களெல்லாம் ஏகாதிபத்தியவாதிகளின் கரங்களில் கருவிகளாக மாறுகின்றனர்; கூலிப்படையினரெல்லாம் தம்மை முஜாஹிதுகள் என்று எண்ணிக் கொள்கின்றனர்.

“எந்தவிதமான வேதனையும் தங்களுக்கு ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். எனவே, அவர்கள் (உண்மையை உணரமுடியாக்) குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள். அவர்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் நோக்கியவனாக இருக்கின்றான்.” (5:7)


Sign In


 

Forgot Password ?


 

Not a Member? Sign Up